பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பன்னு தொல் புகழ்ப் பாண்டி நல் நாட்டு இடைச் செந்நெல் ஆர் வயல் தீங்கரும்பின் அயல் துன்னு புகப் புறம் பணை சூழ்ந்தது மன்னு வண்மையினார் மண மேல்குடி.
அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய செப்ப அரும் சீர்க் குலச் சிறையார் திண்மை வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர்.
காரணம் கண் நுதற்கு அன்பர் என்னவே வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து ஈர நன் மொழி எய்த இசைத்து உள்ளார்.
குறி இல் நான்கு குலத்தினர் ஆயினும் நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில் செறிவுஉறப் பணிந்து ஏத்திய செய்கையார்.
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் அலகு இல் தீமையர் ஆயினும் அம்புலி இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில் தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையர்.
பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும் உண்ப வேண்டி ஒருவர் அணையினும் எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார்.
பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து ஆதி தேவர் தம் அஞ்சு எழுத்தாம் அவை ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் பாதம் நாளும் பரவிய பண்பினார்.
இன்ன நல் ஒழுக்கத்தினால் ஈறு இலாத் தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ் மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார்.
ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி நாயனார் திருப் பாதம் நவின்று உளார் பாய சீர் புனை பாண்டி மா தேவியார் மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார்.
புன்நயத் தருகந்தர் பொய் நீக்கவும் தென்னர் நாடு திருநீறு போற்றவும் மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.
வாதில் தோற்ற அமணரை வன் கழுத் தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் வேத நீதி மிழலைக் குறும்பர் தாள்.