பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

சத்தி நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்
குளம் நிறைப்பது; கோல் ஒன்றில் எண் திசை
அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சை ஊர்.

2

வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம்
பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார்.

3

அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை
இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
வைத்த நாவை வலித்து அரி சத்தியால்
சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார்.

4

தீங்கு சொற்ற திருஇலர் நாவினை
வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர்.

5

அன்னது ஆகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேர் உலகத்தில் வலி உடன்
பல்நெடும் பெருநாள் பரிவால் செய்து
சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர்.

6

ஐயம் இன்றி அரிய திருப்பணி
மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர்
வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.

7

நாயனார் தொண்டரை நலம் கூறலார்
சாய நா அரி சத்தியார் தாள் பணிந்து
ஆய மா தவத்து ஐயடிகள் எனும்
தூய காடவர் தம் திறம் சொல்லுவாம்.