பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருத்தி; அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம் முடியா முதலே! என் கருத்து முடியும்வண்ணம், முன் நின்றே!
முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்று, பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே! என்? என்று, அருள் இவர நின்று, போந்திடு என்னாவிடில், அடியார், உன் நின்று, இவன் ஆர் என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே!
உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா உள்ளத்து உணர்வு இலியேன், சகம் தான் அறிய முறையிட்டால், தக்க ஆறு அன்று என்னாரோ? மகம் தான் செய்து வழி வந்தார் வாழ, வாழ்ந்தாய்; அடியேற்கு உன் முகம் தான் தாராவிடின், முடிவேன்; பொன்னம்பலத்து எம் முழு முதலே!
முழு முதலே! ஐம் புலனுக்கும், மூவர்க்கும், என் தனக்கும், வழி முதலே! நின் பழ அடியார் திரள், வான், குழுமிக் கெழு முதலே! அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ? என்று அழும் அதுவே அன்றி, மற்று என் செய்கேன்? பொன்னம்பலத்து அரைசே!
அரைசே! பொன்னம்பலத்து ஆடும் அமுதே! என்று உன் அருள் நோக்கி, இரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே, வேசற்றேன்; கரை சேர் அடியார் களி சிறப்ப, காட்சி கொடுத்து, உன் அடியேன்பால், பிரை சேர் பாலின் நெய் போல, பேசாது இருந்தால், ஏசாரோ?
ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான் என்று, பிறர் எல்லாம் பேசா நிற்பர்; யான் தானும் பேணா நிற்பேன், நின் அருளே; தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க, ஈசா! பொன்னம்பலத்து ஆடும் எந்தாய்! இனித்தான் இரங்காயே!
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன் என்று என்று, ஏமாந்திருப்பேனை, அரும் கற்பனை கற்பித்து, ஆண்டாய்; ஆள்வார் இலி மாடு ஆவேனோ? நெருங்கும் அடியார்களும், நீயும், நின்று, நிலாவி, விளையாடும் மருங்கே சார்ந்து, வர, எங்கள் வாழ்வே, வா என்று அருளாயே!
அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல் என்பார் ஆர், இங்கு? பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே! பொன்னம்பலக் கூத்தா! மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, வா என்று, உன் தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ?
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்; திரண்டு, திரண்டு, உன் திருவார்த்தை விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்; வெவ்வேறு இருந்து, உன் திருநாமம் தரிப்பார்; பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார்; அவர் முன்னே நரிப்பு ஆய், நாயேன் இருப்பேனோ? நம்பி! இனித்தான் நல்காயே!
நல்காது ஒழியான் நமக்கு என்று, உன் நாமாம் பிதற்றி, நயன நீர் மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகி, பல்கால் உன்னைப் பாவித்து, பரவி, பொன்னம்பலம் என்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய்! என்னை உடையானே!