பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

அதிசயப் பத்து
வ.எண் பாடல்
1

வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே,
செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

2

நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும் கூடேன்;
ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை என் அடியான் என்று,
பாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

3

முன்னை என்னுடை வல் வினை போயிட, முக்கண் அது உடை எந்தை,
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்கு,
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி தனில் இள மதி அது வைத்த
அன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

4

பித்தன் என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:
ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,
செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

5

பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;
குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை
இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.

6

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு; நல் வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை,
அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

7

பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை;
இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை
முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி,
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

8

நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;
நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;
தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி
ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

9

உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,
பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

10

இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்
பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை
தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!