பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால், ஆ! ஆ! என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்; போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.
புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள் மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்; நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட, தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்; யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக, கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு, போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.
அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை; கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை; செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான் பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே.
விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை; உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்; அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே; புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.
புகழ்மின்; தொழுமின்; பூப் புனைமின்; புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு, இகழ்மின் எல்லா அல்லலையும்; இனி, ஓர் இடையூறு அடையாமே, திகழும் சீர் ஆர் சிவபுரத்துச் சென்று, சிவன் தாள் வணங்கி, நாம் நிகழும் அடியார் முன் சென்று, நெஞ்சம் உருகி, நிற்போமே.
நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்; இனி, நாம் செல்வோமே, பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே; நிற்பீர் எல்லாம், தாழாதே, நிற்கும் பரிசே, ஒருப்படுமின்; பிற்பால் நின்று, பேழ்கணித்தால், பெறுதற்கு அரியன், பெருமானே.
பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள், அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே, திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து, திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.
சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்; போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம் ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்! போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.
புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர், மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்; தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!