வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்
மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின்
மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி,
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு,
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!
கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!
அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!
சூழ் இரும் துன்பம் துடைப்போன், வாழ்க!
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!
நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!
பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசை
நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்,
நிற்பன நிறீஇ,சொல் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;