தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,
அறை கூவி, ஆட்கொண்டருளி,
மறையோர் கோலம் காட்டி அருளலும்;
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,
தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,
பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,
நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,
கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்
ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு
கோல் தேன் கொண்டு செய்தனன்;
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்தாங்கு, அன்று,
அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:
சிவ.அ.தியாகராசன்