மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்;
மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;
இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு,
அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;
முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,
ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,
வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,
ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;
பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;
ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
தாள் தளை இடுமின்!
சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!
பற்றுமின்! என்றவர் பற்று முற்று ஒளித்தும்;
சிவ.அ.தியாகராசன்