திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின்
சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு,
அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப்
பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும்,
பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின்
போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம்
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின்
காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.