பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவேணுபுரம்
வ.எண் பாடல்
1

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

2

படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,
கிடைப் பல்கணம் உடையான், கிறி தப்படையான், ஊர்
புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.

3

கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,
படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.

4

தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர,
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே.

5

நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,
தேர் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

6

விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.

7

மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.

8

வயம் உண்ட அமாலும் அடி காணாது அலமாக்கும்,
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்
வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

9

மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.

10

வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்,
ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கழுமலம் - (திருவிராகம்)
வ.எண் பாடல்
1

பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்
உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில்
உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர்
கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல்
மருவுமே!

2

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை;
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர்
சடை மிசை
தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற
மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல்
மருவுமே!

3

வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர்
கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி
கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு
எய்துமதே.

4

வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது
எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை
உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர்
கழல்களே!

5

தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை
இடை உடன்-
நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல்
கணையினன்;
மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.

6

வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி
மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல்
உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ,
அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல்
ஒருதலைமையே.

7

முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்;
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை;
இருள் கடி
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை,
அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு
அறியமே.

8

கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, "அடி சரண்!" என,
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி
கிளர் பிறை,
விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை
உடையவன், உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர்
அதே.

9

கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும்,
அவன்
விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி
விழவு அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர்
அருவினை
எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன்
உலகமே.

10

அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண்
உருவர்கள்,
சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற
உரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே

11

பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர்
திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-
மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

“ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்!” என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

2

“எந்தை!” என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலை கொடு சேர் காழியார்,
வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

3

தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

4

மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

5

மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.

6

கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்
கங்கை புனைந்த சடையார், காழியார்,
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.

7

கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்,
அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.

8

எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.

9

ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.

10

பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார், காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.

11

கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புகளி
வ.எண் பாடல்
1

விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

2

ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

3

வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.

4

கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.

5

காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.

6

வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

7

கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;
செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;
அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;
பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.

8

தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.

9

மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

10

உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

11

இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்

அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.

2

திரை ஆர் புனல் சூடிய செல்வன்,
வரையார் மகளோடு மகிழ்ந்தான்,
கரை ஆர் புனல் சூழ்தரு, காழி
நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!

3

இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும்,
கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி
அடியார் அறியார், அவலமே.

4

ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்,
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய்,
களி ஆர் பொழில் சூழ்தரு, காழி
எளிது ஆம், அது கண்டவர் இன்பே.

5

பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்,
முனி தான், உமையோடு முயங்கி,
கனி ஆர் பொழில் சூழ்தரு, காழி
இனிது ஆம், அது கண்டவர் ஈடே.

6

கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து
மலையான் மகளோடு மகிழ்ந்தான்,
கலையார் தொழுது ஏத்திய, காழி
தலையால் தொழுவார் தலையாரே.

7

திரு ஆர் சிலையால் எயில் எய்து,
உரு ஆர் உமையோடு உடன் ஆனான்,
கரு ஆர் பொழில் சூழ்தரு, காழி
மருவாதவர் வான் மருவாரே.

8

அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,
சுரக்கும் புனல் சூழ்தரு, காழி
நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!

9

இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும்,
கரு நல் பரவை கமழ், காழி
மருவ, பிரியும், வினை மாய்ந்தே.

10

சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,
அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்;
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.

11

நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருச்சிரபுரம்
வ.எண் பாடல்
1

பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?

2

கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய்,
அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம்
சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார்,
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே?

3

நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?

4

கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய்,
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே
கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

5

புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக்
கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே?

6

கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?

7

குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே
இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து,
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே?

8

மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!

9

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

10

புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம்
மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே,
சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே?

11

தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருத்தோணிபுரம்
வ.எண் பாடல்
1

வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

2

எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!
செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!

3

பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக்
கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை,
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!

4

காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! “காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள்” என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!

5

பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த
கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்!
தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!

6

சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,
வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத
கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!

7

முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;
தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!

8

பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி,
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே!
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர்
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!

9

நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;
சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!

10

சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால்
முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம்
பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!

11

போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!

2

பியல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி, பெய் பலிக்கு என்று, அயலே
கயல் ஆர் தடங்கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே?
இயலால் நடாவி, இன்பம் எய்தி, இந்திரன் ஆள் மண்மேல்
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே!

3

நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர் சடை மாட்டு, அயலே
பகலாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், பாய் கலை வவ்வுதியே?
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால், அமரர்
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே!

4

சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன்,
அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய,
வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!

5

தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன்,
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே?
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க,
துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே!

6

கவர் பூம்புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு, அயலே
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண்மேல்
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே!

7

முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன் கடை மாட்டு அயலே,
நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே?
தலை ஆய்க் கிடந்து இவ் வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்,
சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே!

8

“எருதே கொணர்க!” என்று ஏறி, அங்கை இடு தலையே கலனா,
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய், கண் துயில் வவ்வுதியே?
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒருபது தேர் தொலையப்
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே!

9

துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும்,
கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!

10

நிழலால் மலிந்த கொன்றை சூடி, நீறு மெய் பூசி, நல்ல
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே?
அழல் ஆய் உலகம் கவ்வை தீர, ஐந்தலை நீள் முடிய
கழல் நாகஅரையன் காவல் ஆகக் காழி அமர்ந்தவனே!

11

கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய
சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே?
நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!

12

கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல
படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு
அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருச்சண்பைநகர்
வ.எண் பாடல்
1

பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.

2

சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்
போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த
சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.

3

மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய
நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்
பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த,
தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.

4

மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட
தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக்
கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால்,
சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.

5

கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி
நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை
சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.

6

மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து,
அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்-
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.

9

மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும்,
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி
தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.

10

போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,
நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின்
மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர்,
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே.

11

வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,
சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புறவம்
வ.எண் பாடல்
1

நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

2

உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம்
விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக,
இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

3

பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க,
கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி,
அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி,
எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

4

நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்;
கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை,
புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக,
எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

5

செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

6

பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்,
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து,
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

7

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர்
விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்,
பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக,
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

8

விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

9

நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

10

ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

11

பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவெங்குரு
வ.எண் பாடல்
1

காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக்
கறுத்த வெங்காலன்,
ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள்
விருப்பன்; எம்பெருமான்-
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு
பவளம் முன் உந்தி,
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி
உள் வீற்றிருந்தாரே.

2

பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும்
அரவினை அணிந்து, அழகு ஆகப்
பண்ணினைப் பாடி ஆடி, முன் பலி கொள் பரமர் எம் அடிகளார்
பரிசுகள் பேணி,
மண்ணினை மூடி, வான்முகடு ஏறி, மறிதிரை கடல் முகந்து எடுப்ப,
மற்று உயர்ந்து
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.

3

ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, ஒண்திறல் வேடனது
உரு அது கொண்டு,
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து, அவற்கு அளித்து,
உடன் காதல் செய் பெருமான்-
நேரிசை ஆக அறுபதம் முரன்று, நிரை மலர்த் தாதுகள் மூச,
விண்டு உதிர்ந்து,
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.

4

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம்
எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர்; விடையினர் பூதம் கொடுகொட்டி
குடமுழாக் கூடியும், முழவப்-
பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய்
புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.

5

சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம்
இட்டு உடன் ஆகக்
கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை
கவர்ந்து, அழகு ஆகப்
படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும்
அமர்ந்து, அருள்செய்து,
விடையொடு பூதம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.

6

கரை பொரு கடலில் திரை அது மோத, கங்குல் வந்து ஏறிய
சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி, ஓங்கு வான் இருள்
அறத் துரப்ப, எண்திசையும்
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள்
ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி
உள் வீற்றிருந்தாரே.

7

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு
மதகளிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல்
கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று
வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி
உள் வீற்றிருந்தாரே.

8

பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை
முடியொடு தோள் அவை நெரிய,
ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள்
அது கொடுத்து, அழகு ஆய
கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய
செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி
உள் வீற்றிருந்தாரே.

9

ஆறு உடைச் சடை எம் அடிகளைக் காண, அரியொடு பிரமனும்
அளப்பதற்கு ஆகி,
சேறு இடை, திகழ் வானத்து இடை, புக்கும் செலவு அறத்
தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண்
நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்கண்ணினர்; விண்ணவர்
கைதொழுது ஏத்த,
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.

10

பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற உரை
விட்டு, அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல்
வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து,
காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற
விளித்து, வெய்து ஆய
வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.

11

விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி
உள் வீற்றிருந்தாரை,
நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம்
மிகு பத்தும்
பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில
வல்லார்கள்,
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு
வீற்றிருப்பவர் தாமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கழுமலம்
வ.எண் பாடல்
1

அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும்
மதியமும் விரவிய அழகர்;
மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை
முகில் புல்கும் மிடறர்;
பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி
கொள்வர்; வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

2

கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு முடி உறைபவர்;
படுதலைக் கையர்;
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை
அடிகளார் பதி அதன் அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல்-திரை கொணர்ந்து
எற்றிய கரைமேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம்
வினை கரிசு அறுமே.

3

எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி இடை மூன்றினர்;
நால் மறையாளர்;
மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை;
எட்டு இருங்கலை சேர்
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ,
மதனனை வெகுண்ட
கண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம்
வினைகரிசு அறுமே.

4

எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்;
நீறு மெய் பூசித்
திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்;
வேய் புரை தோளி,
வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர்
வடிவொடும் வந்த
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம்
வினை கரிசு அறுமே.

5

ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண்
பொலிந்து இலங்கிய உருவர்;
பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை
அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்
நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு,
ஒண்மணி வரன்றி,
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,
நம் வினை கரிசு அறுமே.

6

முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி உடை அமரர்கள்
அடி பணிந்து ஏத்த,
பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார்
பேணிய கோயில்
பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய
கையினர் ஆகி,
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

7

கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார், குரை கழல்
பணிந்தவர்க்கு அருளிய பொருளின்
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடுந் துயர்
தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம்
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, மது விரி புன்னைகள்
முத்து என அரும்ப,
கலைக்கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

8

புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், பொருவரை
எடுத்தவன், பொன்முடி திண்தோள்
பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது
உறை கோயில் அது ஆகும்
வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில்
பெயர் உளது என்ன,
இயம்பல படக் கடல்-திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

9

விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், வெறி கமழ்
தாமரையோனும், என்று இவர் தம்
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று
இனிது உறைகோயில்
மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி,
வெள் இப்பியும் சுமந்து,
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய,
நம் வினை கரிசு அறுமே.

10

ஆம் பலதவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலாச்
சமணரும், தேரரும், கணி சேர்
நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா
முதல்வர் தம் மேனிச்
சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி
வையகத்து ஏற்று,
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம்
நினைய, நம் வினைகரிசு அறுமே.

11

கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய
கோயில் கொண்டவர் மேல்,
வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை
ஞானசம்பந்தன் தமிழின்
ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால்
நினைந்து ஏத்த வல்லார்மேல்
மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின்
மிகப் பெறுவாரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.

2

துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம்,
தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி,
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே.

3

ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்
பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.

4

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

5

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

6

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும்
நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும்
பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்
கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே.

9

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

10

தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள்,
பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்!
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக்
கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.

11

வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்த
ஈசன் நகர்தன்னை, இணை இல் சம்பந்தன்
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப்
பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!

2

காண உள்குவீர்! வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே!

3

நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல்
ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே!

4

அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்,
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

5

வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து
ஆணி நன்பொனைக் காணுமின்களே!

6

“பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும்,
ஏந்து கொங்கையாள் வேந்தன்” என்பரே.

7

கரிய கண்டனை, சிரபுரத்துள் எம்
அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே!

8

நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி
இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே!

9

தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே!

10

அயனும் மாலும் ஆய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே.

11

தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.

12

தொழு மனத்தவர், கழுமலத்து உறை
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புறவம்
வ.எண் பாடல்
1

எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

2

“மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன்” என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.

3

வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்
பற்று ஆய், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்
பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.

4

துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,
மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்-நாள், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.

5

“தேவா! அரனே! சரண்!” என்று இமையோர் திசைதோறும்,
“காவாய்!” என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.

6

‘கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, “அரனே! நின் அடி சரண்!” என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி’ என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.

7

“எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி” என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.

8

பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;
புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.

9

“மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,
மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம்” என்பர்
பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.

10

வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;
மெய் அல தேரர், “உண்டு, இலை” என்றே நின்றே தம்
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.

11

பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி
அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா!” என்பார் தத்துவஞானத் தலையாரே.

2

“மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக்
கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி
மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே!
ஐயா!” என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.

3

“இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ,
களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி,
அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே!” என்று
உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே.

4

“எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து,
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி,
பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே!” என்பார்க்கு
நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே.

5

“மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட,
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி,
உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்-
குழையா!” என்று கூற வல்லார்கள் குணவோரே.

6

“குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலிக் காழி,
வெறி ஆர் கொன்றைச் சடையா! விடையா!” என்பாரை
அறியா, வினைகள்; அருநோய், பாவம், அடையாவே.

7

“உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு,
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி,
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா!” என்ன, தவம் ஆமே.

8

“ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ,
காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி,
வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும்
மேவிப் பரவும் அரசே!” என்ன, வினை போமே.

9

“மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும்
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித்
தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா
நிலையாய்!” என்ன, தொல்வினை ஆய நில்லாவே.

10

வடி கொள் வாவிச் செங்கழு நீரில் கொங்கு ஆடிக்
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக் காழி
அடிகள் தம்மை, அந்தம் இல் ஞானசம்பந்தன்
படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புகலி
வ.எண் பாடல்
1

ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,
ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

2

ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று,
சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய,
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல
மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.

3

ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ,
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்;
பாறு அணி வெண் தலையில் பகலே “பலி” என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.

4

வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில்
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப்
புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.

5

சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்-
ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன்
வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்
பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.

6

மைந்து அணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டு இனங்கள் வந்து
நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம்
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும்
புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.

7

மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்
அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.

8

வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே.

9

தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி
ஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம்
மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்த
போது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே.

10

வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும்
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்!
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.

11

வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்-
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருச்சிரபுரம்
வ.எண் பாடல்
1

வார் உறு வனமுலை மங்கை பங்கன்,
நீர் உறு சடை முடி நிமலன், இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சீர் உறு வளவயல் சிரபுரமே.

2

அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்,
திங்களொடு அரவு அணி திகழ் முடியன்,
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே.

3

பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித்
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத்
தெரிந்தவன், வள நகர் சிரபுரமே.

4

நீறு அணி மேனியன், நீள் மதியோடு
ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்-
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வளவயல், சிரபுரமே.

5

அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே.

6

கலை அவன், மறை அவன், காற்றொடு தீ
மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன்,
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த
சிலையவன், வள நகர் சிரபுரமே.

7

வான் அமர் மதியொடு மத்தம் சூடித்
தானவர் புரம் எய்த சைவன் இடம்
கான் அமர் மடமயில் பெடை பயிலும்
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.

8

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக்
கறுத்தவன், கார் அரக்கன் முடிதோள்
இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன்
செறுத்தவன், வள நகர் சிரபுரமே.

9

வண்ண நல்மலர் உறை மறையவனும்
கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய்
விண் உற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நல்மதில் அணி சிரபுரமே.

10

வெற்று அரை உழல்பவர், விரி துகிலார்,
கற்றிலர் அற உரை புறன் உரைக்க,
பற்றலர் திரி புரம் மூன்றும் வேவச்
செற்றவன் வள நகர் சிரபுரமே.

11

அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,-
தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்;
வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்;
பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே.

2

கற்றைச் சடையது, கங்கணம் முன்கையில்-திங்கள் கங்கை;
பற்றித்து, முப்புரம், பார் படைத்தோன் தலை, சுட்டது பண்டு;
எற்றித்து, பாம்பை அணிந்தது, கூற்றை; எழில் விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே.

3

கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது;
தூ விளங்கும் பொடி, பூண்டது, பூசிற்று, துத்தி நாகம்;
ஏ விளங்கும் நுதல், ஆனையும், பாகம், உரித்தனர்; இன்
இளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

4

உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை;
எரித்தது, ஒர் ஆமையை இன்பு உறப் பூண்டது, முப்புரத்தை;
செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; பல்-நூல்
விரித்தவர் வாழ்தரு வேங்குருவில் வீற்றிருந்தவரே.

5

கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன
இட்டுவர் தம், கலப்பு இலர், இன்புகழ், என்பு; உலவின்
மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும், ஏந்துவர்; வான்
தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.

6

சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்; தம்
கூத்து, அவர், கச்சுக் குலவி நின்று, ஆடுவர்; கொக்கு இறகும்,
பேர்த்தவர் பல்படை பேய் அவை, சூடுவர்; பேர் எழிலார்;
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

7

காலது, கங்கை கற்றைச் சடையுள்ளால், கழல் சிலம்பு;
மாலது, ஏந்தல் மழு அது, பாகம்; வளர் கொழுங் கோட்டு
ஆல் அது, ஊர்வர் அடல் ஏற்று, இருப்பர்; அணி மணி நீர்ச்
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே.

8

நெருப்பு உரு, வெள்விடை, மேனியர், ஏறுவர்; நெற்றியின் கண்,
மருப்பு உருவன், கண்ணர், தாதையைக் காட்டுவர்; மா முருகன்
விருப்பு உறு, பாம்புக்கு மெய், தந்தையார்; விறல் மா தவர் வாழ்
பொருப்பு உறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே.

9

இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள்,
கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமை பெற்றது;
கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டு அகத்து;
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

10

அடி இணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்;
கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்;
பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்;
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.

11

கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர்,
எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு,
மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய
கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

12

கல் உயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுள் தன்னை
நல் உரை ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர்; சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கழுமலம்
வ.எண் பாடல்
1

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்
பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும்,
சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால்
தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக்
காடு ஆர், ஆர், சீர் மேவும் கழுமல வள நகரே.

2

பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப்
பீடு ஆர் நீடு ஆர் மாடுஆரும்பிறைநுதல் அரிவையொடும்,
உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு
ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை
வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார்
வாரா, நேரே மால் ஆகும் வச வல அவனது இடம்
கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டு இனம்
கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே.

3

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின்
சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு,
அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப்
பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும்,
பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின்
போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம்
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின்
காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.

4

அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து
ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்
மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும்
மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய,
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ்
மூவா மூர் மூரா முனிவு செய்தவனது இடம்
கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

5

திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச்
சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப்
போலே, , நீர், தீ, கால், மீ, புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்
கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக்
காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே.

6

செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும்
சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய்,
ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு
ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும்
பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம்
கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக்
காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே

7

பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா,
முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய்,
சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

8

செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில்
சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன்,
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு
ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு
ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்
கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக்
கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.

9

பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப்
பான் ஆம் ஆறு ஆனாமே, அப் பறவையின் உருவு கொள
ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான்
ஓதான், அஃது உணராது, உருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கணின்
தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும்,
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

10

தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா,
தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்;
இட்டத்தால், “அத்தம்தான் இது அன்று; அது” என்று நின்றவர்க்கு
ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்;
போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம்
கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல்
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

11

கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக்
கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத்
தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை,
தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள்,
எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு,
ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா,
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

2

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

3

புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.

4

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

5

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

6

பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி.

7

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

8

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

9

தசமுக நெறிதர ஊன்று சண்பையான்
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்.

10

காழி ஆனய உள்ளவா காண்பரே
காழி ஆனய உள்ளவா காண்பரே
காழி ஆனய உள்ளவா காண்பரே
காழி ஆனய உள்ளவா காண்பரே.

11

கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே.

12

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கழுமலம்
வ.எண் பாடல்
1

"சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண்" என்று சிறந்த
அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள
கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட, செங்குமுதம் வாய்கள்
காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே.

2

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய மலைச் செல்வி
பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான், அமரர் தொழ,
அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது
தன்மை பாடி,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டு அயரும்
கழுமலமே.

3

அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய, பூதம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத்தோன் கருதும்
கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு, ஊன் சலிக்கும்
காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய மெய்யர் வாழ்
கழுமலமே.

4

பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச் சயம் எய்தும் பரிசு
வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன்
பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின் சூளிகைமேல்
மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு
எய்தும் கழுமலமே.

5

ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்களொடு, வன்னி, மத்தம்,
மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர் செஞ்சடையான் நிகழும்
கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளிமலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு சுதை மாடக் கழுமலமே.

6

"தரும் சரதம் தந்தருள்!" என்று அடி நினைந்து, தழல் அணைந்து,
தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த
பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப, அது குடித்துக் களித்து
வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய, அகம் பாயும் கழுமலமே.

7

புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய், நிலன் ஐந்து ஆய்,
கரணம் நான்குஆய்,
அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு ஆய், நின்றான்;
அமரும்கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு கொம்பு உதைப்ப,
கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர, புள் இரியும்
கழுமலமே.

8

அடல் வந்த வானவரை அழித்து, உலகு தெழித்து உழலும்
அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல் பணிகொண்டோன்
மேவும் கோயில்
நட வந்த உழவர், "இது நடவு ஒணா வகை பரலாய்த்து" என்று
துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே.

9

பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு கேழல் உரு ஆகிப்
புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா வகை நின்றான் அமரும்
கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள் கொண்டு அணிந்து,
பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து நின்று, ஏத்தும் கழுமலமே.

10

குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவம் ஆய்
நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும், உணராத வகை நின்றான் உறையும்
கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி, இவை இசைய
மண்மேல்-தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க, மேல்படுக்கும்
கழுமலமே.

11

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல்,
நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன்தான் நயந்து
சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார், மலராள்
துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான் அடி சேர முயல்கின்றாரே.