பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச் சயம் எய்தும் பரிசு
வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன்
பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின் சூளிகைமேல்
மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு
எய்தும் கழுமலமே.