கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு முடி உறைபவர்;
படுதலைக் கையர்;
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை
அடிகளார் பதி அதன் அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல்-திரை கொணர்ந்து
எற்றிய கரைமேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம்
வினை கரிசு அறுமே.