வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி!
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி!
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி!
குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி!
நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி!
நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.