பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்;
அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்;
அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்;
எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்;
எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்;
செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

2

ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்;
ஓங்காரன்காண்; ஊழி முதல் ஆனான்காண்;
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான்காண்;
அண்டன்காண்; அண்டத்துக்கு அப்பாலன்காண்;
மான் ஏறு கரதலத்து எம் மணிகண்டன்காண்; மா
தவன்காண்; மா தவத்தின் விளைவு ஆனான்காண்;
தேன் ஏறும் மலர்க்கொன்றைக்கண்ணியான்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

3

ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்;
இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்;
தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்;
சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்;
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்;
அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்;
தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

4

கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்;
கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்;
எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்;
ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்;
பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்;
பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்;
செங்கண் வாள் அரா, மதியோடு உடன்
வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

5

கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்;
கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான்காண்;
போர் ஏறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண்;
புண்ணியன்காண்; எண்ண(அ)ரும் பல் குணத்தினான்காண்;
நீர் ஏறு சுடர்ச் சூலப்படையினான்காண்;
நின்மலன்காண்; நிகர் ஏதும் இல்லாதான்காண்;
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

6

பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான்காண்;
பிறப்பு இலிகாண்; பெண்ணோடு ஆண் ஆயினான்காண்;
கறை உருவ மணிமிடற்று வெண் நீற்றான்காண்;
கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீகாண்;
இறை உருவக் கனவளையாள் இடப்பாகன்காண்; இரு
நிலன்காண்; இரு நிலத்துக்கு இயல்பு ஆனான்காண்;
சிறை உருவக் களி வண்டு ஆர் செம்மையான்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

7

தலை உருவச் சிரமாலை சூடினான்காண்; தமர்
உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண்;
அலை உருவச் சுடர் ஆழி ஆக்கினான்காண்; அவ்
ஆழி நெடுமாலுக்கு அருளினான்காண்;
கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான்காண்;
கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான்காண்;
சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

8

ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல்
மழுவாள் தான் ஒன்று பியில்மேல் ஏந்து
கையன்காண்; கடல் பூதப் படையினான்காண்; கண்
எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான்காண்;
வெய்யன்காண்; தண்புனல் சூழ் செஞ்சடையான்காண்;
வெண் நீற்றான்காண்; விசயற்கு அருள் செய்தான்காண்;
செய்யன்காண்; கரியன்காண்; வெளியோன்
தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

9

மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்;
மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்;
இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்;
இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்;
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்;
கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்;
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு
ஆரூரான்காண், என் சிந்தையானே.

10

பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்;
புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்;
மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்;
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-;
இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்;
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்
தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி,
உள்ளக்கிழியின் உரு எழுதி,
உயிர் ஆவணம் செய்திட்டு, உன் கைத் தந்தால்,
உணரப்படுவாரோடு ஒட்டி, வாழ்தி;
அயிராவணம் ஏறாது, ஆன் ஏறு ஏறி, அமரர்
நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட
அயிராவணமே! என் அம்மானே! நின் அருள்
கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.

2

எழுது கொடி இடையார், ஏழை மென்தோள்
இளையார்கள், நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல், பாவி நெஞ்சே! பண்டுதான்
என்னோடு பகைதான் உண்டோ?
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி,
முடியால் உற வணங்கி, முற்றம் பற்றி,
அழுது, திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும், ஆரூர்தானே.

3

தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ்
புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி;
கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த
நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, “உமையாள்
மணவாளா!” என்று வாழ்த்தி,
“ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்;
அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?.

4

கோவணமோ, தோலோ, உடை ஆவது? கொல்
ஏறோ, வேழமோ, ஊர்வதுதான்?
பூவணமோ, புறம்பயமோ, அன்று ஆயில்-தான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ?
தீ வணத்த செஞ்சடைமேல்-திங்கள் சூடி, திசை
நான்கும் வைத்து உகந்த செந்தீவண்ணர்,
ஆவணமோ, ஒற்றியோ, அம்மானார் தாம்-
அறியேன் மற்று-ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே?.

5

ஏந்து மழுவாளர்; இன்னம்பரா அர்; எரிபவள
வண்ணர்; குடமூக்கி(ல்)லார்;
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக
வார்சடையார்; வந்து வலஞ்சுழி(ய்)யார்;
போந்தார், அடிகள் புறம்பயத்தே; புகலூர்க்கே
போயினார்; போர் ஏறு ஏறி;
ஆய்ந்தே இருப்பார் போய், ஆரூர் புக்கார்;
அண்ணலார் செய்கின்ற கண் மாய(ம்)மே!.

6

கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக்
கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி,
உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால்
வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்;
மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்!
மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,-
திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்!
செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே.

7

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;
அன்னையையும் அத்தனையும் அன்றே
நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை;
தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே!.

8

ஆடுவாய், நீ நட்டம்; அளவின் குன்றா அவி
அடுவார், அருமறையோர்; அறிந்தேன், உன்னை;
பாடுவார், தும்புருவும் நாரதாதி; பரவுவார்,
அமரர்களும் அமரர்கோனும்;
தேடுவார், திருமாலும் நான்முக(ன்)னும்;
தீண்டுவார், மலைமகளும் கங்கையாளும்;
கூடுமே, நாய் அடியேன் செய் குற்றேவல்?
குறை உண்டே, திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே?.

9

நீர் ஊரும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்!
நிலாத்திங்கள்-துண்டத்தாய்! நின்னைத் தேடி,
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம்
எலாம் திரிதந்து, நின்னைக் காண்பான்,
தேர் ஊரும் நெடுவீதி பற்றி நின்று, திருமாலும்
நான்முகனும், தேர்ந்தும் காணாது,
“ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்-அமரர்கள்
தம் பெருமானே! ஆரூராயே!.

10

நல்லூரே நன்று ஆக நட்டம் இட்டு, நரை
ஏற்றைப் பழையாறே பாய ஏறி,
பல் ஊரும் பலிதிரிந்து, சேற்றூர் மீதே,-பலர்
காண.-தலையாலங்காட்டின் ஊடே,
இல் ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி,
இராப் பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு(வ்),
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண,
இறைப்பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே.

11

கருத்துத் திக்கத நாகம் கையில் ஏந்தி, கருவரை
போல் களியானை கதறக் கையால்
உரித்து எடுத்துச் சிவந்து, அதன் தோல் பொருந்த
மூடி, உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி,
திருத் துருத்தி திருப் பழனம் திரு நெய்த்தானம்
திரு ஐயாறு இடம்கொண்ட, செல்வர்; இந்நாள்
அரிப் பெருத்த வெள் ஏற்றை அடர ஏறி,
அப்பனார், இப் பருவம் ஆரூராரே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை,
பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை,
வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை,
வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை,
சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை,
சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை,
ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை,
-ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

2

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை;
விளக்கின் ஒளி, மின்னின் ஒளி, முத்தின் சோதி,
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்தன்னை;
ஓதாதே வேதம் உணர்ந்தான்தன்னை;
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்தன்னை,
அமுது உண்டார் உலந்தாலும் உலவா தானை-
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை;-
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

3

ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை,
ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை,
வருகாலம் செல்காலம் ஆயினானை, வன்
கருப்புச்சிலைக் காமன் உடல் அட்டானை,
பொரு வேழக்-களிற்று உரிவைப் போர்வையானை,
புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை,
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை,-
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

4

மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை,
வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை,
ஒப்பானை, ஒப்பு இலா ஒருவன் தன்னை,
உத்தமனை, நித்திலத்தை, உலகம் எல்லாம்
வைப்பானை, களைவானை, வருவிப்பானை,
வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை,
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை,-
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

5

பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை; மற்றைப்
பிண்டத்தைப் படைத்தானை; பெரிய வேதத்-
துண்டத்தில்-துணி பொருளை; சுடுதீ ஆகி, சுழல்
கால் ஆய், நீர் ஆகி, பார் ஆய், இற்றைக்
கண்டத்தில்-தீதின் நஞ்சு அமுதுசெய்து
கண்மூன்று படைத்தது ஒரு கரும்பை; பாலை;
அண்டத்துக்கு அப் புறத்தார் தமக்கு வித்தை;-
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

6

நீதிஆய், நிலன் ஆகி, நெருப்பு ஆய், நீர் ஆய்,
நிறை கால் ஆய், இவையிற்றின் நியமம் ஆகி,
பாதிஆய், ஒன்று ஆகி, இரண்டு ஆய், மூன்று
ஆய், பரமாணு ஆய், பழுத்த பண்கள் ஆகி,
சோதி ஆய், இருள் ஆகி, சுவைகள் ஆகி. சுவை
கலந்த அப்பால் ஆய், வீடு ஆய், வீட்டின்
ஆதி ஆய் அந்தம் ஆய், நின்றான் தன்னை-
ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள்
இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு
இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர்
தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த்
தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்;
இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.

2

ஐம்பெருமாபூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று
ஒருவீர் வேண்டீர்! ஈண்டு இவ் அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு
இல்லையே, நுகர் போகம்; யானேல், வானோர்
உம்பரும் ஆய் ஊழியும் ஆய் உலகு ஏழ் ஆகி
ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல், வானோர்-
தம் பெருமானாய் நின்ற அரனை, காண்பேன்;
தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன்மி(ன்)னே!.

3

சில் உருவில் குறி இருத்தி, நித்தல் பற்றி, செழுங்
கணால் நோக்கும் இது ஊகம் அன்று;
பல் உருவில்-தொழில் பூண்ட பஞ்சபூதப்-பளகீர்!
உம் வசம் அன்றே! யானேல், எல்லாம்
சொல் உருவின் சுடர் மூன்று ஆய், உருவம் மூன்று
ஆய், தூ நயனம் மூன்று ஆகி, ஆண்ட ஆரூர்
நல் உருவில் சிவன் அடியே அடைவேன்;
நும்மால் நமைப்புண்ணேன்; கமைத்து நீர் நடமின்க(ள்)ளே!.

4

உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து
உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர்! நுங்கள்
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு,
ஐயோ! வையகமே போதாதே, யானேல், வானோர்
பொன் உருவை, தென் ஆரூர் மன்னு குன்றை,
புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை, புகுந்து என் சிந்தை
தன் உருவைத் தந்தவனை, எந்தை தன்னை,
தலைப்படுவேன்; துலைப் படுப்பான் தருக்கேன்மி(ன்)னே!.

5

துப்பினை முன் பற்று அறா விறலே! மிக்க
சோர்வு படு சூட்சியமே! சுகமே! நீங்கள்
ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம்
உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே; என் தன்
வைப்பினை, பொன் மதில் ஆரூர் மணியை,
வைகல் மணாளனை, எம்பெருமானை, வானோர் தங்கள்
அப்பனை, செப்பட அடைவேன்; நும்மால் நானும்
ஆட்டுணேன்; ஓட்டந்து, ஈங்கு அலையேன்மி(ன்)னே;.

6

பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே!
உலோபமே! பொறையே! நீங்கள்
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம்
உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே? யானேல்,
அம் கமலத்து அயனொடு மால் ஆகி, மற்றும்
அதற்கு அப்பால் ஒன்று ஆகி, அறிய ஒண்ணாச்
செங்கனகத் தனிக் குன்றை, சிவனை, ஆரூர்ச்
செல்வனை, சேர்வேன்; நும்மால் செலுத்துணேனே!.

7

இடர், பாவம் என, மிக்க துக்க, வேட்கை,
வெறுப்பே, என்று அனைவீரும் உலகை ஓடிக்
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள்
குறி நின்றது அமையாதே? யானேல், வானோர்-
அடையார் தம் புரம் மூன்றும் எரிசெய்தானை,
அமரர்கள் தம் பெருமானை, அரனை, ஆரூர்
உடையானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால்
ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.

8

விரைந்து ஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா
வெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள்
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்துத் தின்பீர்க்கு
இல்லையே, நுகர் போகம்? யானேல், வானோர்
கரைந்து ஓட வரு நஞ்சை அமுதுசெய்த
கற்பகத்தை, தற்பரத்தை, திரு ஆரூரில்
பரஞ்சோதிதனை, காண்பேன்; படேன், நும்
பண்பில்; பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்மி(ன்)னே!.

9

மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச-
முகரிகாள்! முழுதும் இவ் உலகை ஓடி
நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை
நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர்
நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர்
ஆள்வானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால்
ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.

10

சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித்
துப்பறை என்று அனைவீர்! இவ் உலகை ஓடிச்
செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல்
செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்க,
தருக்கி மிக வரை எடுத்த, அரக்கன் ஆகம் தளர
அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு(வ்)
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து
இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்;
காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்;
கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்;
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்;
கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்;
ஆற்றினையும் செஞ்சடைமேல்
வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

2

பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்;
பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்;
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்;
காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்;
பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்;
பேர் நந்தி என்னும் பெயரார்போலும்;
அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

3

துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்;
தூய திருமேனிச் செல்வர்போலும்;
பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்;
பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்;
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்;
வாசுகி மா நாணாக வைத்தார் போலும்;
அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

4

ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்;
ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்;
நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்;
ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்;
காமரங்கள் பாடித் திரிவார்போலும்;
ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும்
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

5

ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்;
இமையவர்கள் ஏத்த இருந்தார்போலும்;
கானக் கல்லால்கீழ் நிழலார்போலும்; கடல்
நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
வானத்து இளமதி சேர் சடையார்போலும்;
வான் கயிலைவெற்பில் மகிழ்ந்தார்போலும்;
ஆனத்து முன் எழுத்து ஆய் நின்றார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

6

காமனையும் கரி ஆகக் காய்ந்தார்போலும்;
கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்;
சொல் ஆகிச் சொல்பொருள் ஆய் நின்றார்போலும்;
நா மனையும் வேதத்தார் தாமேபோலும்;
நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர்போலும்;
ஆ(ம்)மனையும் திருமுடியார் தாமேபோலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

7

முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்;
மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்;
செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்;
செல் கதிதான் கண்ட சிவனார்போலும்;
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்;
கங்காளவேடக் கருத்தர்போலும்;
அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி
ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

8

இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்;
இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர்போலும்;
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார்போலும்;
தூத் தூய திருமேனித் தோன்றல்போலும்;
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்போலும்;
மா நாகம் நாண் ஆக, வளைத்தார்போலும்;
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

9

பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்;
பிறவி, இறவி, இலாதார்போலும்;
முண்டத்து முக்கண் உடையார்போலும்;
முழுநீறு பூசும் முதல்வர்போலும்;
கண்டத்து இறையே கறுத்தார்போலும்;
காளத்தி, காரோணம், மேயார்போலும்;
அண்டத்துக்கு அப்புறம் ஆய் நின்றார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

10

ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்;
ஊழிபல கண்டு இருந்தார்போலும்;
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்;
பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்;
உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்;
உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்;
அருகு ஆக வந்து என்னை, “அஞ்சல்!”
என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

11

நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்;
ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார்போலும்;
கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார்போலும்;
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார்போலும்; திசை
அனைத்தும் ஆய், அனைத்தும் ஆனார்போலும்;
அன்று ஆகில், ஆயிரம் பேரார்போலும்-
அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணியானை,
பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை,
பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,-
அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

2

பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை,
பொங்கு வெண்நூலானை, புனிதன்தன்னை,
மின்னானை, மின் இடையாள் பாகன்தன்னை,
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான்தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை,
தத்துவனை, உத்தமனை, தழல் போல் மேனி
அன்னானை, ஆரூரில் அம்மான்தன்னை-
அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

3

ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை,
ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான்தன்னை,
கொடுமழுவாள் கொண்டது ஓர் கையான்தன்னை,
காற்றானை, தீயானை, நீரும் ஆகி, கடி கமழும்
புன்சடைமேல் கங்கைவெள்ள-
ஆற்றானை, ஆரூரில் அம்மான்தன்னை,-
அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

4

முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை,
மூவாத மேனி முக்கண்ணினானை,
சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை,
சங்கரனை, சங்கக் குழையான்தன்னை,
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்தன்னை,
மறுமையும் இம்மையும் ஆனான்தன்னை,
அம் திரனை, ஆரூரில் அம்மான்தன்னை,
-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

5

பிற நெறி ஆய், பீடு ஆகி, பிஞ்ஞகனும் ஆய்,
பித்தனாய், பத்தர் மனத்தினுள்ளே
உற நெறி ஆய், ஓமம் ஆய், ஈமக்காட்டில்,
ஓரிபல விட, நட்டம் ஆடினானை;
துறநெறி ஆய், தூபம் ஆய், தோற்றம் ஆகி,
நாற்றம் ஆய், நல் மலர்மேல் உறையா நின்ற
அறநெறியை; ஆரூரில் அம்மான்தன்னை;-
அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6

பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை,
பாவகனை, பாவம் தீர்க்கும்
குழகனை, கோள் அரவு ஒன்று ஆட்டுவானை,
கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்தன்னை,
விழவனை, வீரட்டம் மேவினானை,
விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை,
அழகனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
அடிநாயேன் அயர்த்த ஆறே!.

7

சூளாமணி சேர் முடியான்தன்னை,
சுண்ணவெண்நீறு அணிந்த சோதியானை,
கோள் வாய் அரவம் அசைத்தான்தன்னை,
கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை,
நாள் வாயும் பத்தர் மனத்து உளானை,
நம்பனை, நக்கனை, முக்கணானை,
ஆள்வானை, ஆரூரில் அம்மான்தன்னை,-
அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

8

முத்தினை, மணிதன்னை, மாணிக்கத்தை, மூவாத
கற்பகத்தின் கொழுந்து தன்னை,
கொத்தினை, வயிரத்தை, கொல் ஏறு ஊர்ந்து
கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்தன்னை,
பத்தனை, பத்தர் மனத்து உளானை, பரிதி
போல்-திருமேனி உடையான்தன்னை,
அத்தனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
அடிநாயேன் அயர்த்த ஆறே!.

9

பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி
போல்-திருமேனிப் பால்நீற்றானை,
நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை,
நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை,
செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை,
செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை,
ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது
அடிநாயேன் அயர்த்த ஆறே!.

10

சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு
அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண்
இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை,
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை,
வெண்நீறு அணிந்தான்தன்னை,
ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
அடிநாயேன் அயர்த்த ஆறே!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்;
வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்;
வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட,
அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்;
அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்-
செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன் தானே.

2

அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும்
ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்;
கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை,
குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித்
தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும்
தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும்,
திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன் தானே.

3

நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்;
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்;
வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்;
வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்;
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்;
கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்-
சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன்தானே.

4

கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்;
கற்பகம்காண்; காலனை அன்று உதைசெய்தான்காண்;
ஊன் ஏறும் உடைதலையில் பலி கொள்வான்காண்;
உத்தமன்காண்; ஒற்றியூர் மேவினான்காண்;
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்
தான்காண்; ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான்காண்-
தேன் ஏறு மலர்ச்சோலைத் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன்தானே.

5

பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்;
பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான்காண்;
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான்காண்;
வானவரும் அறியாத நெறி தந்தான் காண்-
நறப் படு பூ மலர், தூபம், தீபம், நல்ல
நறுஞ்சாந்தம், கொண்டு ஏத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன்தானே.

6

சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்;
தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்;
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை
அறுத்தவன்காண்; அணி பொழில் சூழ் ஐயாற்றான்காண்;
எங்கள் பெருமான்காண்; என் இடர்கள் போக அருள்
செய்யும் இறைவன்காண்- இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன் தானே.

7

நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்;
நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்;
மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்;
வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்;
துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்;
சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன் தானே.

8

பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்;
புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்;
மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்;
வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்;
கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்;
கோலமா நீறு அணிந்த மேனியான்காண்-
செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன் தானே.

9

விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான்காண்;
வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான்காண்;
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான்காண்;
வாய் மூரும் மறைக்காடும், மருவினான் காண்;
புண்டரிகக் கண்ணானும், பூவின்மேலைப்
புத்தேளும், காண்பு அரிய புராணன் தான்காண்-
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன் தானே.

10

செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்;
தென் ஆனைக்காவன்காண்; தீயில் வீழ,
மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்;
வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்;
அரு வரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும்,
ஐந் நான்கு தோளும், நெரிந்து அலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண்-திரு
ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
வா! “ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய்!” என்றும்,
“சுடர் ஒளியாய்! உள் விளங்கு சோதீ!” என்றும்,
“தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா!” என்றும்,
“கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா!”
என்றும், “கலைமான் மறி ஏந்து கையா!” என்றும்,
“அடல் விடையாய்! ஆரமுதே! ஆதீ!” என்றும்,
“ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.

2

செடி ஏறு தீ வினைகள் தீரும் வண்ணம்
சிந்தித்தே, நெஞ்சமே! திண்ணம் ஆகப்
“பொடி ஏறு திருமேனி உடையாய்!” என்றும்,
“புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா!” என்றும்,
“அடியேனை ஆள் ஆகக் கொண்டாய்!” என்றும்,
“அம்மானே! ஆரூர் எம் அரசே!” என்றும்,
“கடி நாறு பொழில் கச்சிக் கம்பா!” என்றும்,
“கற்பகமே!” என்று என்றே, கதறா நில்லே!.

3

நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
சய! போற்றி போற்றி!” என்றும்,
“அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!”
என்றும், “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.

4

புண்ணியமும் நன்நெறியும் ஆவது எல்லாம்
நெஞ்சமே! இது கண்டாய்; பொருந்தக் கேள், நீ:
“நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா!” என்றும்,
“நுந்தாத ஒண்சுடரே!” என்றும், “நாளும்
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ண (அ)ரிய திருநாமம் உடையாய்!” என்றும்,
“எழில் ஆரூரா!” என்றே ஏத்தா நில்லே!.

5

இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால்; இரவினொடு
நண்பகலும் ஏத்தி வாழ்த்தி,
“பிழைத்தது எலாம் பொறுத்து அருள் செய் பெரியோய்!”
என்றும், “பிஞ்ஞகனே! மைஞ் ஞவிலும் கண்டா!” என்றும்,
அழைத்து அலறி, “அடியேன் உன் அரணம் கண்டாய்,
அணி ஆரூர் இடம் கொண்ட அழகா!” என்றும்,
“குழல் சடை எம் கோன்!” என்றும், கூறு, நெஞ்சே!
குற்றம் இல்லை, என்மேல்; நான் கூறினேனே.

6

நீப்ப(அ)ரிய பல் பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்; நெஞ்சே! “நித்தம் ஆகச்
சேப் பிரியா வெல் கொடியினானே!” என்றும்,
“சிவலோக நெறி தந்த சிவனே!” என்றும்,
‘பூப் பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும், “போற்றி!” என்னத்
தீப்பிழம்பு ஆய் நின்றவனே! செல்வம் மல்கும்
திரு ஆரூரா!’ என்றே சிந்தி, நெஞ்சே!.

7

பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,
பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில்,
சுற்றி நின்ற சூழ் வினைகள் வீழ்க்க வேண்டில்,
சொல்லுகேன்; கேள்: நெஞ்சே, துஞ்சா வண்ணம்!
“உற்றவரும் உறு துணையும் நீயே” என்றும்,
“உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன்” என்றும்,
“புற்று அரவக் கச்சு ஆர்த்த புனிதா!” என்றும்,
“பொழில் ஆரூரா!” என்றே, போற்றா நில்லே!.

8

மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி
ஆவது இது கண்டாய்; “வானோர்க்கு எல்லாம்
அதிபதியே! ஆரமுதே! ஆதீ!” என்றும்;
“அம்மானே! ஆரூர் எம் ஐயா!” என்றும்;
துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச்
சூழும் வலம் செய்து தொண்டு பாடி,
“கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா!
கற்பகமே!” என்று என்றே கதறா நில்லே!.

9

பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே!
“பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா!
தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு
ஆரூர்த் திருமூலட்டானா!” என்றும்,
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி
நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று,
ஏசற்று நின்று, “இமையோர் ஏறே!” என்றும்,
“எம்பெருமான்!” என்று என்றே ஏத்தா நில்லே!.

10

புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம் புறமே திரியாதே போது, நெஞ்சே!
“சலம் கொள் சடைமுடி உடைய தலைவா!”
என்றும், “தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய்!” என்றும்,
“இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா!”
என்றும், “எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய்!” என்றும்,
“நலம் கொள் அடி என் தலைமேல் வைத்தாய்!”
என்றும், நாள்தோறும் நவின்று ஏத்தாய்! நன்மை ஆமே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல்
அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

2

வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி!
கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய்,
போற்றி! கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி!
அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி!
ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி!
செங்கனகத் தனிக் குன்றே, சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

3

மலையான் மடந்தை மணாளா, போற்றி!
மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி!
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி!
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி!
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி!
ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி!
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

4

பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி!
பூதப்படை உடையாய், போற்றி போற்றி!
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய்,
போற்றி! மறி ஏந்து கையானே, போற்றி போற்றி!
உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி
போற்றி! உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி!
சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

5

நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி!
நல்-தவனே, நின் பாதம் போற்றி போற்றி!
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே, போற்றி!
வெண்மதி அம் கண்ணி விகிர்தா, போற்றி!
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய், போற்றி! தூ
நீறு மெய்க்கு அணிந்த சோதீ, போற்றி!
செஞ்சடையாய், நின் பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

6

சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி!
சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி!
பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி!
புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி!
அம் கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி!
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

7

வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி!
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி!
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி!
குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி!
நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி!
நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

8

உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி!
உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி!
வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி! வானவர்
கோன் தோள் துணித்த மைந்தா, போற்றி!
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா, போற்றி!
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி!
தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய்,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

9

பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி! புத்தேளிர்
போற்றும் பொருளே, போற்றி!
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி!
திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி!
சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி!
சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி!
சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

10

பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி!
பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி!
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி!
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி!
அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி! அன்று
அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும்,
சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர்
உருவே மூ உருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
காமனையும் கண் அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த
நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

2

மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ?
வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலை பேறு பெறுவித்து நின்ற நாளோ? நினைப்ப
(அ)ரிய தழல் பிழம்பு ஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ?
அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையால் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ?
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

3

பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும்
நீயும் போய் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி
திகழும் அம்பலத்தை மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

4

ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ? ஓர்
உகம் போல் ஏழ் உகம் ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலை ஆன வானோர் செய்த
தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடு மாலோடு,
“நில்லாய், எம்பெருமானே!” என்று அங்கு ஏத்தி,
வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?
வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

5

பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானே!
நீல மாமணி கண்டத்து எண் தோளானே! நெரு
நலையாய் இன்று ஆகி நாளை ஆகும்
சீலமே! சிவலோக நெறியே ஆகும் சீர்மையே!
கூர்மையே! குணமே! நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6

திறம் பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ?
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா
முனிவர்க்கு அருள் செய்து அங்கு இருந்த நாளோ?
பிறங்கிய சீர்ப் பிரமன் தன் தலை கை ஏந்திப்
பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ?
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ?
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

7

நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக்
கலந்து உரைக்கக் கற்பகம் ஆய் நின்ற நாளோ?
காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று,
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ,
வாசுகியை வாய் மடுத்து, வானோர் உய்ய,
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?
தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

8

பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பார்
அகத்தே பரஞ்சுடர் ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடு இலா வான் உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?
விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

9

புகை எட்டும், போக்கு எட்டும், புலன்கள் எட்டும்,
பூதலங்கள் அவை எட்டும், பொழில்கள் எட்டும்,
கலை எட்டும், காப்பு எட்டும், காட்சி எட்டும், கழல்
சேவடி அடைந்தார் களை கண் எட்டும்,
நகை எட்டும், நாள் எட்டும், நன்மை எட்டும், நலம்
சிறந்தார் மனத்து அகத்து மலர்கள் எட்டும்,
திகை எட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

10

ஈசனாய், உலகு ஏழும் மலையும் ஆகி,
இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ?
மதயானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ?
சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ?
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.