புண்ணியமும் நன்நெறியும் ஆவது எல்லாம்
நெஞ்சமே! இது கண்டாய்; பொருந்தக் கேள், நீ:
“நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா!” என்றும்,
“நுந்தாத ஒண்சுடரே!” என்றும், “நாளும்
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ண (அ)ரிய திருநாமம் உடையாய்!” என்றும்,
“எழில் ஆரூரா!” என்றே ஏத்தா நில்லே!.