பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் விருத்தனை, பாலனை, வினவுதிரேல், ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும் கருத்தவன், வள நகர் கடைமுடியே.
திரை பொரு திரு முடி திங்கள் விம்மும் அரை பொரு புலி அதள் அடிகள் இடம், திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் கரை பொரு வள நகர் கடைமுடியே.
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை, கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி, ஏல நல்மலரொடு விரை கமழும் காலன வள நகர் கடைமுடியே.
கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார் மை அணி மிடறு உடை மறையவன் ஊர், பை அணி அரவொடு மான் மழுவாள் கை அணிபவன் இடம் கடைமுடியே.
“மறை அவன், உலகு அவன், மாயம் அவன், பிறையவன், புனல் அவன், அனலும் அவன், இறையவன்” என உலகு ஏத்தும் கண்டம்- கறையவன் வள நகர் கடைமுடியே.
பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கை மடவரலாளை ஒர்பாகம் வைத்து, குடதிசை மதி அது சூடு சென்னிக் கடவுள் தன் வள நகர் கடைமுடியே.
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல், அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்; கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் கடி புல்கு வள நகர் கடைமுடியே.
நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச் சாதல் செய்து, அவன், “அடி சரண்!” எனலும், ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் காதல் செய் வள நகர் கடைமுடியே.
அடி முடி காண்கிலர் ஓர் இருவர் புடை புல்கி, “அருள்!” என்று போற்று இசைப்ப, சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம் கடை முடி; அதன் அயல் காவிரியே.
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை; எண்ணியகால், அவை இன்பம் அல்ல; ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்த கண்ணுதல் வள நகர் கடைமுடியே.
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர் சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே