பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர் வழிபாடு செய் மா மடம் மன்னினையே.
கடல் ஏறிய நஞ்சு அமுதுஉண்டவனே! உடலே! உயிரே! உணர்வே! எழிலே! அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர் விடலே! தொழ, மா மடம் மேவினையே.
கழிகாடலனே! கனல் ஆடலினாய்! பழிபாடு இலனே! அவையே பயிலும் அழிபாடு இலராய், அழுந்தை மறையோர் வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.
வானே! மலையே! என மன் உயிரே! தானே தொழுவார் தொழு தாள் மணியே! ஆனே! சிவனே! அழுந்தையவர், "எம் மானே!" என, மா மடம் மன்னினையே.
அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்! நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும், இலைஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ! நிலையா அது கொள்க என, நீ நினையே!
நறவு ஆர் தலையின் நயவா! உலகில் பிறவாதவனே! பிணி இல்லவனே! அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர் மறவாது எழ, மா மடம் மன்னினையே.
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம் சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில் அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர் நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.
பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும் கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்! அரியாய்! எளிவாய்! அழுந்தை மறையோர் வெரியார் தொழ, மா மடம் மேவினையே.
மணி நீள் முடியால் மலையை அரக்கன் தணியாது எடுத்தான் உடலம் நெரித்த அணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர் மணி மா மடம் மன்னி இருந்தனையே.
முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர் நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள் அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர் படியால் தொழ, மா மடம் பற்றினையே.
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத் திருஞானசம்பந்தன செந்தமிழ்கள், உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.