பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப் பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன் மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!
பூ ஆர் சடையின் முடிமேல் புனலர்; அனல் கொள்வர்; நா ஆர் மறையர்; பிறையர்; நற வெண்தலை ஏந்தி, ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி, மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான், மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை, தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார் அந் நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிது அன்றே.
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட, நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன் மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.
குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை ஒளிரும் பிறை ஒன்று உடையான், ஒருவன், கை கோடி நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன், மிளிரும்(ம்) அரவம் உடையான் மீயச்சூரானே.
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார், கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார், காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர், மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே.
புலியின் உரி தோல் ஆடை, பூசும் பொடி நீற்றர், ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச வலிய திரள் தோள் வன் கண் அரக்கர் கோன் தன்னை மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார், போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார் கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த கொள்கையார்; பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே.
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர், நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி, ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.