பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான், நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து, மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.
சூடும், பிறை சென்னி; சூழ்காடு இடம் ஆக ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகு ஆக; நாடும் சிறப்பு ஓவா நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்போர்பால் பற்றா ஆம், பாவமே.
கல்லால் நிழல் மேவி, காமுறு சீர் நால்வர்க்கு, அன்று, எல்லா அறன் உரையும் இன் அருளால் சொல்லினான் நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தைச் சொல்லாதவர் எல்லாம் சொல்லாதார். தொல் நெறிக்கே
கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல் ஆடையான், நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான் ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில் சூலத்தான்"" என்பார்பால், சூழா ஆம், தொல்வினையே.
கறை ஆர் மணிமிடற்றான், காபாலி, கட்டங்கன், பிறை ஆர் வளர்சடையான், பெண்பாகன் நண்பு ஆய நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம், இன்பமே.
கண் ஆர் நுதலான், கனல் ஆடு இடம் ஆகப் பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி, நண்ணார் புரம் எய்தான், நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்நெறியே.
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான், பெண் பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான் நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை எண் பாவு சிந்தையார்க்கு ஏலா, இடர்தானே.
பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால் வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தின் ஒலி ஓவ நாலூர்மயானத்து என் அத்தன்; அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.
மாலோடு நான்முகனும் நேட, வளர் எரி ஆய், மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம் பாலோடு நெய் ஆடி; பாதம் பணிவோமே.
துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார், புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்! நண்பால் சிவாய!" எனா நாலூர்மயானத்தே இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே.
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான் நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச் சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே.