பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத் தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும் சீரானே! சீர் திகழும் திருக்காறாயில் ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.
மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர் விதியானே! விதி உடை வேதியர்தாம் தொழும் நெதியானே! நீர் வயல் சூழ் திருக்காறாயில் பதியானே! என்பவர் பாவம் இலாதாரே.
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் மண்ணானே! விண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம் கண்ணானே! கடிபொழில் சூழ் திருக்காறாயில் எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே.
தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே! சேயானே! சீர் திகழும் திருக்காறாயில் மேயானே! என்பவர்மேல் வினை மேவாவே.
கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே! சீர் திகழும் திருக்காறாயில் நிலையானே! என்பவர்மேல் வினை நில்லாவே.
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும் போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில் நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே.
சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள் ஏத்தானே! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் காத்தானே! கார் வயல் சூழ் திருக்காறாயில் ஆர்த்தானே! என்பவர்மேல் இடர் அடராவே.
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம் எடுத்தானை ஏதம் ஆக(ம்), முனிவர்க்கு இடர் கெடுத்தானே! கேழ் கிளரும் திருக்காறாயில் அடுத்தானே! என்பவர்மேல் வினை அடராவே.
பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை மறையானே! மாலொடு நான்முகன் காணாத இறையானே! எழில் திகழும் திருக்காறாயில் உறைவானே! என்பவர்மேல் வினை ஓடுமே.
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை; கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில் குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே.
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில் ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல் வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.