பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான், மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான், நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே.
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர் கூறு உடையான், படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான், நடம் மல்கும் ஆடலினான், நால்மறையோர் பாடலினான், கடம் மல்கு மா உரியான், உறை கோயில் கைச்சினமே.
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும் சூடலான், வெண்மதியும் துன்று கரந்தையொடும்; ஆடலான் அங்கை அனல் ஏந்தி; ஆடு அரவக் காடலன்; மேவி உறை கோயில் கைச்சினாமே.
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு உண்ட பிரான் என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த, விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவியக் கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே.
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான், வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு உடையான், சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு அநங்கைக் காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே.
மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை பயின்றான், அங்கை ஓர் வெண்தலையான், ஆடு அரவம் பூண்டு உகந்தான், திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல் கங்கையினான், மேவி உறை கோயில் கைச்சினமே.
வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில் ஆக. எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான். பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர் கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே.
போது உலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்; மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் நீதியினால் ஏத்த நிகழ்வித்து, நின்று ஆடும் காதலினான்; மேவி உறை கோயில் கைச்சினாமே.
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும், எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்; பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல் கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன், கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை, பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார், விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே.