பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம் கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?
கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும் கலந்து இலங்க உடையான், உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி விடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள அடைவார்-வினைகள் அவை என்க!-நாள் தொறும் ஆடுவரே!
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து கொண்டு நுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழு மலத்துள்(ள்) அழுந்தும் விரை வாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கே வரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்; விழுமிய நூல் உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர்; கேட்கில் உலகம் முற்றும் இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட, கழுமலவன் நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே.
சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை! பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை, பசுபதியை, “சந்தித்த காலம் அறுத்தும்” என்று எண்ணி இருந்தவர்க்கு முந்தித் தொழு கழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே.
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய், அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம், சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர், அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்து அமரர் சுற்றிக் கிடந்து, தொழப்படுகின்றது-சூழ் அரவம் தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் கற்றைச் சடை முடியார்க்கு இடம் ஆய கழுமலமே.
உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து அடையும் உனை வந்து அடைந்தார், அமரர் அடி இணைக்கீழ்; நடையும் விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள விடையன் தனிப் பதம் நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை; இப் பார்முழுதும் நிரவிக் கிடந்து தொழப்படுகின்றது;-நீண்டு இருவர் சிரமப்பட வந்து சார்ந்தார், கழல் அடி காண்பதற்கே- அரவக் கழல் அடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத் தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத் தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே- அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில், கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்- மடைவாய்க் குருகு இனம், பாளை விரிதொறும் வண்டு இனங்கள் பெடை வாய் மது உண்டு, பேராது இருக்கும்-பெரும்பதியே.