பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது; வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன், செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே.
கைத்தலை மான் மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்; பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்; செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதி குடி அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.
முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்; அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் செம் பொனை; நல் மலர் மேலவன் சேர் திரு வேதி குடி அன்பனை; நம்மை உடையனை;-நாம் அடைந்து ஆடுதுமே.
பத்தர்கள், நாளும் மறவார், பிறவியை ஒன்று அறுப்பான்; முத்தர்கள் முன்னம் பணி செய்து பார் இடம் முன் உயர்ந்தான்; கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதி குடி அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார்? அவர் கை மான் அணைந்து ஆடும்; மதியும் புனலும் சடை முடியன்; தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதி குடி, ஆன் அண் ஐந்து ஆடும், மழுவனை-நாம் அடைந்து ஆடுதுமே.
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய, பண்ணின் இசை மொழி பாடிய வானவர் தாம் பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதி குடி நண்ண அரிய அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்; ஆர்ந்த மடமொழி மங்கை ஓர் பாகம் மகிழ்ந்து உடையான்; சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதி குடிச் சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.
எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்; விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதி குடி அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே.
மை அணி கண்டன்; மறை விரி நாவன்; மதித்து உகந்த மெய் அணி நீற்றன்; விழுமிய வெண்மழுவாள் படையன்; செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதி குடி ஐயனை ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.
வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய திருத்தனை, தேவர் பிரான் திரு வேதி குடி உடைய அருத்தனை, ஆரா அமுதினை,-நாம் அடைந்து ஆடுதுமே.