பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர், சரக்குக் காவி, திரிந்து அயராது, கால் பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக் குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா, முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.
கை அனைத்தும் கலந்து எழு காவிரி, செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல் கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள் புக்குக் காவிரி போந்த புனல் கரை, கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா நக்கனை நவில்வார் வினை நாசமே.
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட, கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே.
மேலை வானவரோடு, விரி கடல் மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக் கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்- பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே.
ஆலநீழல் அமர்ந்த அழகனார், காலனை உதைகொண்ட கருத்தனார், கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்- பாலருக்கு அருள்செய்வர், பரிவொடே.
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார், அக்கு அரையர், எம் ஆதிபுராணனார், கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா நக்கனை, தொழ, நம் வினை நாசமே.
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர், கரிய கண்டன் கழல் அடி தன்னையே! குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி, உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்- குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா; வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.