பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஓமாம்புலியூர்
வ.எண் பாடல்
1

ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு
அயின்றானை; அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை
ஆளா உடையான் தன்னை;
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும்
ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து
நாள் செலுத்தினேனே!.

2

“ஆதியான்”, அரி அயன், என்று அறிய ஒண்ணா அமரர்
தொழும் கழலானை; அமலன் தன்னை;
சோதி மதி கலை தொலைய, தக்கன், எச்சன், சுடர் இரவி
அயில் எயிறு, தொலைவித்தானை;
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழ்
ஆர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீது இல் திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே!.

3

வரும் மிக்க மதயானை உரித்தான் தன்னை; வானவர் கோன்
தோள் அனைத்தும் மடிவித்தானை;
தரு மிக்க குழல் உமையாள் பாகன் தன்னை; சங்கரன்
எம்பெருமானை; தரணி தன்மேல்
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி, உத்தமர் வாழ்தரும்,
ஓமாம்புலியூர் மன்னும்
திரு மிக்க வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து
நாள் செலுத்தினேனே!.

4

அன்றினவர் புரம் மூன்றும் பொடி ஆய் வேவ அழல் விழித்த
கண்ணானை; அமரர்கோனை;
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி
எடுத்த விகிர்தன் தன்னை;
ஒன்றிய சீர் இரு பிறப்பர் முத்தீ ஓம்பும், உயர் புகழ் நால்மறை,
ஓமாம்புலியூர் நாளும்
தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே!.

5

பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்பப்
பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை;
பாங்கு இலா நரகு அதனில்-தொண்டர் ஆனார் பாராத
வகை பண்ண வல்லான் தன்னை;
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர், உயர்
புகழ் அந்தணர் ஏத்த, உலகர்க்கு என்றும்
தீங்கு இல், திரு வடதளி எம் செல்வன் தன்னை;
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

6

அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை; ஆராத
இன்னமுதை; அடியார் தம்மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை; உமையாள் நங்கை-மணவாள
நம்பியை; என் மருந்து தன்னை;
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு, துங்கப் பொழில் கெழுவு
தரும், ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே!.

7

மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை; மறையானை;
மறையாலும் அறிய ஒண்ணாக்
கலையானை; கலை ஆரும் கையினானை; கடிவானை,
அடியார்கள் துயரம் எல்லாம்;
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை;
புரம் மூன்று எய்த
சிலையானை; வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து
நாள் செலுத்தினேனே!.

8

சேர்ந்து ஓடும் மணிக் கங்கை சூடினானை, செழு மதியும் பட
அரவும் உடன் வைத்தானை,
சார்ந்தோர்கட்கு இனியானை, தன் ஒப்பு இல்லாத் தழல்
உருவை, தலைமகனை, தகை நால்வேதம்
ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை,
கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை, வடதளி எம் செல்வன் தன்னை, சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே!.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை
எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும்
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து, மீண்டே இன் இசை
கேட்டு இருந்தானை; இமையோர் கோனை;
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட, பைம்பொழில்
சேர்தரும், ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே!.