“ஆதியான்”, அரி அயன், என்று அறிய ஒண்ணா அமரர்
தொழும் கழலானை; அமலன் தன்னை;
சோதி மதி கலை தொலைய, தக்கன், எச்சன், சுடர் இரவி
அயில் எயிறு, தொலைவித்தானை;
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழ்
ஆர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீது இல் திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
திகைத்து நாள் செலுத்தினேனே!.