பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம் பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம் பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே.
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகம் திரிவார் அவிழும் மனமும் எம் ஆதி அறிவும் தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே.
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர் அறுத்துப்புறத்து அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே.
முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து நல் நின்று உலகில் நடு உயிராய் நிற்கும் பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே.
சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர் சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர் சிவன் அருளால் வினை சேர கிலாமை சிவன் அருள் கூடின் அச் சிவலோகம் ஆமே.
புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே.
காயத் தேர் ஏறி மனப் பாகன் கை கூட்ட மாயத் தேர் ஏறி மங்கும் அவை உணர் நேயத் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால் ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே.
கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம் மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம் எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே.
நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவ பெருமான் என்று கூடுவன் கூடிக் குறை கழற்கே செல்ல வீடும் அளவும் விடுகின்றிலேனே.