பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பட மாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் பட மாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே.
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை யாத்தனுக்கு ஈந்த அரும் பொருள் ஆனது மூர்த்திகள் மூவர்க்கு மூ ஏழ் குரவர்க்கும் தீர்த்தம் அது ஆம் தேர்ந்து கொள்வீரே.
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என் பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு நிகர் இலை என்பது நிச்சயம் தானே.
ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில் நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே.
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் ஆறு அணி செஞ் சடை அண்ணல் இவர் என்று வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே.
சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை நான் நொந்து நொந்து வரும் அளவும் சொல்லப் பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே.
அழி தகவு இல்லா அரன் அடியாரைத் தொழு தகை ஞாலத்துத் தூங்கு இருள் நீங்கும் பழுது படா வண்ணம் பண்பனை நாடித் தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே.
பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகிப் புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும் முக மத்தோடு ஒத்து நின்று ஊழி தோறும் ஊழி அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே.
தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அரும்தவம் ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும் ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ் வினை தீர்க்கும் அப் பொன் உலகம் ஆமே.