பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / குருமட தரிசனம்
வ.எண் பாடல்
1

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்த்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே.

2

இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும்
அவனைப் புறம்பு என்று அரற்று கின்றாரே.

3

நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய் மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பு இலி எம் இறை
ஓடும் உலகு உயிராகி நின்றானே

4

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா இரு நிலத்தோர்க்கே.

5

முகம் பீடம் ஆம் மடம் உன்னிய தேயம்
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி
அகம் பரம் ஆதனம் எண் எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.

6

ஆக முகம் ஆம் பீடம் ஆதாரம் ஆகும்
சக முகம் ஆம் சத்தி ஆதனம் ஆகும்
செகமுகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும்
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே.

7

மாயை இரண்டு மறைக்க மறை உறும்
காயம் ஓர் ஐந்தும் கழியத் தான் ஆகியே
தூய பரம் சுடர் தோன்றச் சொரூபத்து உள்
ஆய் பவர் ஞான ஆதி மோனத்தர் ஆமே.