பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / திருக்கூத்துத் தரிசனம் / பொன்பதிக் கூத்து
வ.எண் பாடல்
1

தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பு இல் பேர் இன்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

2

அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தர் அருள் உற்றோர்
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டாரே.

3

அடங்காத என்னை அடக்கி அடி வைத்து
இடம் காண் பர ஆனந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி நல் ஞானக் கூத்தன்
படம்தான் செய்து உள் உடனே படிந்து இருந்தானே.

4

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திரு மன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்பு உற நாடி என் அன்பில் வைத்தேனே.

5

மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப்
பூண் உற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேண் உற்ற சோதிச் சிவ ஆனந்தக் கூத்தனை
ஆணிப் பொன் கூத்தனை யார் உரைப் பாரே.

6

விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும்
செம்மை சிறந்த திரு அம்பலக் கூத்துள்
அம் மலர்ப் பொன் பாதத்து அன்பு வைப்பார் கட்கே.

7

தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்து உள்
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன்
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த
நாட்டம் உறும் குறு நாடகம் காணவே.

8

காளியோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீ கால் நீள் வான் இடை ஆடி
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே.

9

மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும்
சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு
ஏறும் சுழுனை இவை சிவ பூமியே.