பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பாயிரம் / அந்தணர் ஒழுக்கம்
வ.எண் பாடல்
1

அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.

2

காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேர் ஏறி நினைவு உற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

3

பெருநெறி ஆன பிரணவம் ஓர்ந்து
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
இரு நெறி ஆன கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே.

4

சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
எய்த் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வு உற்றுப்
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

5

வேத அந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேத அந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேத அந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
வேத அந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே.

6

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூல் அது கார்ப் பாச நுண்சிகை கேசம் ஆம்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே.

7

சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே.

8

திருநெறி ஆகிய சித்த சித்து இன்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியம் ஆதி கை விட்டுக் காணும்
துரிய சமதி ஆம் தூய் மறை யோர்க்கே.

9

மறையோர் அவரே மறைவர் ஆனால்
மறையோர் தம் வேத அந்த வாய்மையில் தூய்மை
குறையோர் தன் மற்று உள்ள கோலாகலம் என்று
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே.

10

அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தை செய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.