பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர் கல்லா அரசனில் காலன் மிக நல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான் நல்லாரைக் காலன் நணுக நில்லானே.
நாள் தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி நாள் தோறும் நாடி அவன் நெறி நாடான் ஏல் நாள் தோறும் நாடு கெடுமூட நண்ணும் ஆல் நாள் தோறும் செல்வம் நரபதி குன்றுமே.
வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என்பயன் வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே வேட நெறி நில்லார் தம்மை விறல் வேந்தன் வேட நெறி செய்தால் வீடு அது ஆமே.
மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில் வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும் பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து ஆடம் பர நூல் சிகை அறுத்தால் நன்றே.
ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி ஞானிகள் போல நடிக் கின்றவர் தம்மை ஞானி களாலே நரபதி சோதித்து ஞான் உண்டு ஆக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே.
ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும் தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும் காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும் சிறந்த நீர் ஞாலம் செய் தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே.
வேந்தன் உலகை மிக நன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழியாய் நிற்பர் பேர்ந்து இவ் உலகைப் பிறர் கொள்ளத் தாம் கொள்ளப் பாய்ந்த புலி அன்ன பாவகத் தானே.
கால் கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேல் ஏற்றிப் பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர் மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன்கடனே.
தம் தம் சமயத் தகுதி நில்லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத் தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே மெய்த் தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.