பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வரும் ஆதி ஈர் எட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன் போகம் ஏவல் உரு ஆய சத்தி பரத் தியான முன்னும் குருவார் சிவத் தியானம் யோகத்தின் கூறே.
கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள் பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப் புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே.
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்து ஆங்கு இருந்திடில் விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே.
ஒரு பொழுது உன்னார் உடலோடு உயிரை ஒரு பொழுது உன்னார் உயிருள் சிவனை ஒரு பொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை ஒரு பொழுது உன்னார் சந்திரப் பூவே.
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்கும் திரி ஒக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே.
எண் ஆயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் கண்ணாடி போலக் கலந்து நின்றானே.
நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே.
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கித் துயர் அற நாடியே தூங்க வல்லார்க்குப் பயன் இது காயம் பயம் இல்லை தானே.
மணி கடல் யானை வார் குழல் மேகம் அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ் தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே.
கடலொடு மேகம் களிறொடும் ஓசை அட எழும் வீணை அண்டர் அண்டத்துச் சுடர் மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே.
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்து துயராய் நிற்கும் ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே.
நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே.
உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசுடைத் தூங்கு இருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக் கொன்றை ஈசன் கழல் சேரலாமே.
பள்ளி அறையில் பகலே இருள் இல்லை கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம் ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே.
கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித் தண்டு உடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே.
அவ் அவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு அவ் அவர் மண்டலத்து அவ் அவர் தேவராம் அவ் அவர் மண்டலம் அவ் அவர்க்கே வரில் அவ் அவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே.
இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே முளைக் கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில் இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே.
முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயர் நிலை வானவர் கோனே.
நடல் இத்த நாபிக்கு நால் விரல் மேலே மடல் இத்த வாணிக்கு இருவிரல் உள்ளே கடலித்து இருந்து கருத வல்லார்கள் சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே.
அறிவாய சத்து என்னு மாறா அகன்று செறிவான மாயை சிதைத்து அருளாலே பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலை அறிந்தாரே.