பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்றுப் பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவ போதகர் சுத்த சைவரே.
உடல் ஆன ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவப் படல் ஆன கேவல பாசம் துடைத்துத் திடம் ஆய்த் தனை உறல் சித்தாந்த மார்க்கமே.
சுத்தச் சிவன் உரை தான் அதில் தோயாமல் முத்தர் பதப் பொருள் முத்தி வித்து ஆம் மூலம் அத் தகையான் மா அரனை அடைந்தற்றால் சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே தான் என்று நான் என்று இரண்டு இலாத் தற்பதம் தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால் தான் என்று நான் என்றும் சாற்ற கில்லேனே.
சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால் ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும் மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும் பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே.