பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / சற்புத்திர மார்க்கம்
வ.எண் பாடல்
1

மேவிய சற்புத்திர மார்க்கம் மெய்த் தொழில்
தாவிப் பதாஞ்சக மார்க்கம் சகத் தொழில்
ஆவது இரண்டும் அகன்று சக மார்க்கத்
தேவி யோடு ஒன்றல் சன்மார்க்கத் தெளிவு அதே.

2

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகுமே.

3

அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறுகா நரை அன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அற நெறி சேர கிலாரே.

4

அரும் கரை ஆவது அவ் அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒரும் கரையாய் உலகு ஏழின் ஒத்தானே.

5

உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடிக்கே முறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயன் அது ஆகும்
பயந்து பரிக்கில் அப் பான்மையன் ஆமே.

6

நின்று தொழுவன் கிடந்து எம்பிரான் தன்னை
என்றும் தொழுவன் எழில் பரஞ் சோதியைத்
துன்று மலர் தூவித் தொழுமின் தொழும் தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.

7

திரு மன்னும் சற்புத்திர மார்க்கச் சரியை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண் மின்
கரு மன்னும் பாசம் கை கூம்பத் தொழுது
இரு மன்னும் நாள் தோறும் இன்பு உற்று இருந்தே.