பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நக்கீரதேவ நாயனார் / திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
வ.எண் பாடல்
1

வணங்குதும்; வாழி; நெஞ்சே! புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்,நற்
படஅர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.

2

அடிப்போது தம்தலைவைத்(து) அவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார், - முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.

3

கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத்
தழல்வண்ணங் கண்டே தளர்ந்தார் இருவர்;அந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.

4

அண்ணலது பெருமை கண்டனம்; கண்ணுதற்
கடவுள் மன்னிய தடம்மல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல், தேமொழிச் செவ்வாய்த்
திருத்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.

5

போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனி தைவருமால் - தீதில்
மறைக்கண்டன், வானோன், வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.

6

பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்;பெருமான்திருமால்
வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்,மதி சூடிநெற்றிக்
கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக்கார்ப்புனத்துப்
பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே.

7

முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும்
சாரல் தண்பொழில் அணைந்து சோரும்
தடம்மாசு தழீஇய தகலிடம் துடைத்த
தேனுகு தண்தழை தெய்வம் நாறும்
சருவரி வாரல்;எம் பெருமநீர் மல்கு
சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த
மணிநீர்க் குவளை அன்ன
அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.

8

பொருள்தக்கீர், சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும்
அருள்தக்கீர்; ‘யாதும்ஊர்’ என்றேன் - மருள்தக்க
மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்,
தாம்மறைந்தார்; காணேன்கைச் சங்கு.

9

சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே
வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா
றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்நக்கன்
பங்கன்(று) இருவர்க் கொருவடி வாகிய பாவையையே.

10

பாவை ஆடிய துறையும், பாவை
மருவொடு வளர்ந்த வன்னமும், மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உளங்கொண்ட சூழலுங், கள்ளக்
கருங்கண் போன்றகாவியும் நெருங்கி
அவளே போன்ற தன்றே! தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.

11

தானேறும் ஆனேறு கைதொழேன், தண்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன், - வானேறு
மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.

12

ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்கள்,இன் னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.

13

நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூற் சீறியாழ்ப் பாண,
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர,
மூவோம் மூன்று பயன்பெற் றனமே;
நீஅவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமற் பேச வன்மையில்
வான்அர மகளிர் வான்பொருள் பெற்றனை;
அவரேல்,
எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர்; யானேல்
அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பின்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரற் சிறுபறை பூண்ட
அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.

14

தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ, - இனமேறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டணைந்த கொம்பு.

15

கொம்பார் குளிர்மறைக் காடனை, வானவர் கூடிநின்று
‘நம்பர் ‘எனவணங் கப்பெறு வானை, நகர்எரிய
அம்பாய்ந் தவனை, வலஞ்சுழி யானையண் ணாமலைமேல்
வம்பார் நறுங்கொன்றைத் தாருடை ‘யானை வணங்குதுமே.