பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பொன்னி நீர் நாட்டில் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர் இன்மை ஆல் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை மன்னன் ஆர் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர்.
தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும் மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும்; பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும்.
ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில் ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார் நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார்.
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி, நாளும் நல் அமுதம் ஊட்டி, நயந்தன எல்லாம் நல்கி நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார்.
அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து எஞ்சல் இல் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல் தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே.
அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில் மறைப் பெரும் வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச் சிறப்பு உடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்த்த விறல் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்.