பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திற முலை அமுது உண்ட வாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வனப்பினது அளப்பு இல்லா ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதல் காழி மா நகர்த் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர்.
ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையில் அமர் பெருந்திருத்தோணி நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து மேய அத் திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்குத் தூய கைத் திருத் தொண்டினில் அவர் தமைத் துறை தொறும் பயில்விப்பார்.
நல்ல நந்தவனப் பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் பல் பணித் தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர் அல்லும் நன் பகலும் திரு அலகிட்டுத் திரு மெழுக்கு அமைப்போர்கள் எல்லை இல் விளக்கு எரிப்பவர் திரு முறை எழுதுவோர் வாசிப்போர்.
இனைய பல்திருப் பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அத் திருத்தொண்டின் வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிடச் செய்தே அனைய அத்திறம் புரிதலின் தொண்டரை ஆக்கி அன்புஉறு வாய்மை மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்பு உற வழிபடும் தொழில் மிக்கார்.
இப் பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி மெய்ப் பெருந்திரு ஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே முப் பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் ஒப்பு இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல்.
ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத் தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி மான நல் பெரும் கணம் களுக்கு நாதர் ஆம் வழித் தொண்டின் நிலை பெற்றார்.
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி அலகில் தொண்டருக்கு அறிவு அளித்துஅவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்திக் குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றாம்.