பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்; சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே, ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே.
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை; உன்னைப் பிரிந்து, இங்கு ஒரு பொழுதும் தரியேன், நாயேன்; இன்னது என்று அறியேன்; சங்கரா! கருணையினால் பெரியோன் ஒருவன், கண்டு கொள் என்று, உன் பெய் கழல் அடி காட்டி, பிரியேன் என்று என்று, அருளிய அருளும் பொய்யோ? எங்கள் பெருமானே!
என்பே உருக, நின் அருள் அளித்து, உன் இணை மலர் அடி காட்டி, முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா, முனிவர், முழு முதலே, இன்பே அருளி, எனை உருக்கி, உயிர் உண்கின்ற எம்மானே, நன்பே அருளாய் என் உயிர் நாதா! நின் அருள் நாணாமே.
பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்; எம்பெருமானே! முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! முறையோ? என்று எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே.
காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூர, பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே, தாணுவே, அழிந்தேன்: நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால் காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.
பால் திரு நீற்று எம் பரமனை; பரம் கருணையொடும் எதிர்ந்து தோற்றி, மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை; நீதி இலேன், போற்றி, என் அமுதே, என நினைந்து, ஏத்தி, புகழ்ந்து, அழைத்து, அலறி, என் உள்ளே ஆற்றுவன் ஆக; உடையவனே, எனை, ஆவ என்று அருளாயே!