பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே: தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.
செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப் பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும், பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே!
போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி, வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே!
உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான், பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்; மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான், அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக் கோனே! உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட, ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!
உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல் உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின் கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன், முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே.
முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே; முன், அடியாரைப் பிடித்த ஆறும், சோராமல் சோரனேன் இங்கு, ஒருத்தி வாய் துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர் பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.
தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன், நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய், என்றால், அடியேற்குத் தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.
தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ? என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்! பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?
புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன். நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும் தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே!