கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்;
கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு! ஏல் ஓர் எம்பாவாய்!