முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்!