கொலை யானை உரி போர்த்த கொள்கையானை,
கோள் அரியை, கூர் அம்பா வரை மேல் கோத்த
சிலையானை, செம்மை தரு பொருளான் தன்னை,
திரி புரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானை, தத்துவங்கள் ஆனான் தன்னை,
தையல் ஓர்பங்கினனை, தன் கை ஏந்து
கலையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
கண் ஆரக் கண்டேன், நானே.