மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர்
மதி அம் சடையானை, மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை, இறப்பு இலியை, பிறப்பு இலானை,
இமையவர் தம் பெருமானை, உமையாள் அஞ்சக்
கருந் தான-மதகளிற்றின் உரி போர்த்தானை, கன
மழுவாள் படையானை, பலி கொண்டு ஊர் ஊர்
திரிந்தானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.