கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னை,
காதில் வெண் குழையானை, கமழ் பூங்கொன்றைத்-
தாரானை, புலி அதளின் ஆடையானை, தான் அன்றி
வேறு ஒன்றும் இல்லா ஞானப்
பேரானை, மணி ஆரம் மார்பினானை, பிஞ்ஞகனை,
தெய்வ நால்மறைகள் பூண்ட
தேரானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.