சுழித்தானை, கங்கை; மலர் வன்னி, கொன்றை, தூ
மத்தம், வாள் அரவம், சூடினானை;
அழித்தானை, அரணங்கள் மூன்றும் வேவ;
ஆலால-நஞ்சு அதனை உண்டான் தன்னை;
விழித்தானை, காமன் உடல் பொடி ஆய் வீழ;
மெல்லியல் ஓர் பங்கனை; முன் வேல் நல் ஆனை
கிழித்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;
கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.