செம்பொன்னை, நன் பவளம் திகழும் முத்தை,
செழுமணியை, தொழுமவர் தம் சித்தத்தானை,
வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க
நோக்கி மகிழ்ந்தானை, மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை, எம் கயிலாய மலையான் தன்னை,
கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும்
நம்பனை, எம்பெருமானை, நாதன் தன்னை,
நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.