பறைக்கண் நெடும் பேய்க் கணம் பாடல் செய்ய, குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க,
பிறைக் கொள் சடை தாழ, பெயர்ந்து, நட்டம், பெருங்காடு அரங்கு ஆக நின்று, ஆடல் என்னே?
கறைக் கொள் மணிகண்டமும், திண்தோள்களும், கரங்கள், சிரம் தன்னிலும், கச்சும் ஆகப்
பொறிக் கொள் அரவம் புனைந்தீர், பலவும்; பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!