வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை, மறையவனை, வாய்மொழியை, வானவர் தம் கோனை,
புள் வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை, பொன்நிறத்தின் முப்புரிநூல் நான் முகத்தினானை,
முள் வாய மடல்-தழுவி, முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து, விரை நாறும் முருகு விரி பொழில் சூழ்,
கள் வாய கருங்குவளை கண் வளரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .