இழை தழுவு வெண்நூலும் மேவு திருமார்பின் ஈசன், தன் எண்தோள்கள் வீசி எரி ஆட,
குழை தழுவு திருக்காதில் கோள் அரவம் அசைத்து, கோவணம் கொள் குழகனை, குளிர்சடையினானை,
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடந் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே,
கழை தழுவித் தேன் கொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .